ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஆப்கானிஸ்தானில் விரைவில் தலிபான் ஆட்சி!-இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் தகவல்!



ஆப்கானிஸ்தானில் விரைவில் தலிபான் ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் கிருஷ்ணன் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். அவர் தனது புத்தகமான 'Diplomatic Channels' ஐ நேரு சென்டரில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

2014 இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அவ்வாறு அமெரிக்க படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டால் ஹமித் ஹர்சாயின் ஆட்சியை கவிழ்த்து தலிபான்கள் எளிதில் ஆட்சியை பிடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக  அவர் தெரிவித்தார். தலிபான்கள் விரைவில் எளிதாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் பஷ்தூன் பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் ஏற்படும் அதே வேளையில் மசார்-இ-ஷரிப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தலிபான்களின் எதிரியாகிய வடக்கு கூட்டணி படைகள் மீண்டும் பலம் அடையும் என்றும் ஸ்ரீநிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே ஆப்கானிஸ்தான் மீண்டும் போருக்கு முந்திய பழைய நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்திலிருந்து தலிபான் செப்டம்பர், 2001-ல்  வெளியேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை  இந்தியா  அந்த நாட்டிற்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உதவி செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு நெருங்கிய நண்பனான தலிபான் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடித்தால் அது இந்தியாவிற்கு மிகப்பெரும் தலைவலியாக அமையும். ஏற்கனவே தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா தலிபானின் ஆட்சியால் மேலும் பாதிக்கப்படகூடும். ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாக, தலிபான்களின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதில் ISI  முனைப்பாக உள்ளது. 1999 ல் காத்மாண்ட்-நியூ டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் IC -814 விமானக் கடத்தலில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக அனைத்து உதவிகளையும் வழங்கிய தலிபான்களின் செயல்பாடு இங்கு நினைவு கூறத்தக்கதாகும். அப்போது விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் ஆசாரால் தொடங்கப்பட்ட Jaish-e-Mohammed என்ற தீவிரவாத இயக்கம்  இன்று வரை இந்தியாவின் மிகபெரிய தலைவலியாக உள்ளது. 

எனவே எக்காரணத்தை முன்னிட்டும் ஆப்கானிஸ்தானில் தலிபானின் ஆட்சி ஏற்படுவது இந்தியாவிற்கு நல்லதல்ல. தற்போது இந்தியாவின் கைகளில்  மூன்று வழிமுறைகள்தான் உள்ளன. ஒன்று, அமெரிக்க படைகள் வெளியேறிய பின் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்வது. ஆனால் அது இந்தியாவின் பொருளாதாரத்தினால் தாக்குப்பிடிக்க முடியாத செயலாக இருக்கும். ஏனென்றால் ஆப்கானிஸ்தான் பட்ஜெட்டை அமெரிக்காவினால் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. மற்றொன்று  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் கெடுவை தாமதப்படுத்துவது. இது இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கையால் முடியுமா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் முடிந்தவரை விரைவில் வெளியேறத்தான் அமெரிக்கா விரும்புகிறது. மூன்றாவது, தலிபானின் எதிரியான வடக்கு கூட்டணிக்கு (Northern Alliance) ஆயுத உதவிகளையும், பண உதவியையும் அளித்து தலிபானை எதிர்ப்பது ஆகும். இந்த வழிமுறையைதான் இந்தியா பின்பற்றும் என்பது என் அபிப்பிராயம். ஏனென்றால் கடந்த காலத்தில் இந்தியா அதைத்தான் செய்தது. ஆனால் வடக்கு கூட்டணியால் தலிபான்களின் ஆதிக்கத்தை எந்த அளவு தடுக்க முடியும் எனபது கேள்விக்குறிதான். 
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. தலிபானின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் ஏற்படுவது முழு உலகிற்கே நல்லதல்ல.

    பதிலளிநீக்கு
  2. தலிபானின் ஆட்சி தவிர்க்கப்பட்டால் மிகவும் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு