வாழிய அன்னை
ஊழல் வாழியவே
வானவர்
தானவர் போற்றிடவே!
வாழிய அன்னை
ஊழல் வாழியவே
வையகம்
போற்றிட வாழியவே! (1)
காசும்
சட்டமும் காத்திடவே
அடி பொடி
தொண்டரும் வாழ்த்திடவே
மேலிடம்
கீழிடம் அருளிடவே
ஊழல்
அன்னையும் உதித்தாள் அவனியிலே! (2)
தலைநகரத்துவசன்
மனம் மகிழ
பாரத
நாடே மண மணக்க
மக்களின்
நடுவே வறுமை போல்
ஊழல் தாயவள்
உதித்தனளே! (3)
லட்சம்கோடி ஊழல் கண்டு
மன்னவன்
மோகனனும் மதி மயங்கினனே
கையூட்டு
சுவை கண்டவுடன்
கோடி
இன்னும் பல கேட்டனனே! (4)
அதிகார
வர்க்கத்தின் மடியினிலே
களிப்புடன்
தவழ்ந்தாள் குழந்தையென
கொண்டவர்
மனங்கள் கனிந்திடவே
கொட்டிக்
கொடுத்தாள் சுவிஸ் வங்கியினிலே! (5)
பாரதம்
முழுதும் கால் நீட்டி
கொள்ளை அழகு
முகம் உயர்த்தி
செல்லம்
போலே ஊழல் அன்னையும்
செங்கீரை
போலே ஆடினளே! (6)
குடிமக்கள்
நலன்கள் துச்சமென
பாமரர் இரத்தம்
குடித்து
வறுமையை காத்திடும்
தலைவி
அன்னையின்
தாலாட்டில் உறங்கினளே! (7)
ஊழல்
செய்யும் கரங்களினை
அழகாய்ச்
சேர்த்து அன்னையவள்
சகல மன்னர்களும்
சந்தோஷம் கொள்ள
சப்பாணி
கொட்டி மகிழ்ந்தனளே! (8)
பவழம்
ஒத்த செவ்வாயில்
பாகை
ஒக்கும் தேனொழுக
நாட்டை
விற்று கோடி பெற்றவர்க்கு
பரிசாய் பதவிகள்
தந்தனளே! (9)
வாவா வென்று
அரசியல் அழைக்க
வாஞ்சை
மீற அதிகாரம் அழைக்க
அகிலத்தை
நடத்தும் ஊழற்கண்ணி
தளிர்ப்
பதம் பதித்து நடந்தனளே! (10)
கார்ப்ரேட்
முதலாளிகள் கண்டனராம்
விளையாட
ஆசை கொண்டனராம்
பெரிய
பெரிய கரம் உயர்த்தி
அவளை அருகினில்
அழைத்தனரே! (11)
பாரத
அன்னையின் இதயத்தினிலே
வாகாய்
மணலைக் குவித்தெடுத்து
அதிலே
கொஞ்சம் நீர் தெளித்து
அழகாய்ச்
சமாதி செய்தனளே! (12)
நாட்டின்
வளங்களை சுரண்டி வந்து
கருத்துடன்
அவற்றை பதுக்கி வைத்து
களிப்புடன்
ஊழல் அன்னையும்
கழங்காடி
மிக மகிழ்ந்தனளே! (13)
அங்கும்
இங்கும் வியாபித்து
பாரதமெங்கும்
நீக்கமற நிறைந்து
புவியினர்
எல்லாம் வியந்திடவே
பாங்குடன்
அம்மானை ஆடினளே! (14)
வறுமை என்னும் ஊஞ்சலிலே
மாந்தரை
ஆட்டிடும் மங்கையவள்
மரகத
ஊஞ்சல் தனிலமர்ந்து
தலைநகர
மன்னர்கள் மகிழ ஆடினளே! (15)
வாழிய அன்னை
ஊழல் வாழியவே
வானகம்
வையகம் வாழ்த்திடவே
வாழிய அன்னை
ஊழல் வாழியவே
வணங்குவர்
உள்ளத்தில் வாழியவே! (16)
Tweet | |||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக