புதன், 28 நவம்பர், 2012

இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!

பறக்கும் தட்டுக்கள்! (படம்:ITBP)

இந்தியாவின்  சீன எல்லைப் பகுதிகளில் வானத்தில் தென்பட்ட அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் (Unidentified Flying  Objects, or  UFOs) இந்திய அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 1 முதல்  அக்டோபர் 15 வரைக்கும்  இடைப்பட்ட காலத்தில் 100 க்கும் மேற்பட்ட தடவைகள் பறக்கும் தட்டுக்கள் போன்ற அமைப்பை கொண்ட பொருட்கள்  வானத்தில் தென்பட்டதாக அங்கும் வசிக்கும் மக்களால் தெரிவிக்கப்பட்டது.  பறக்கும் தட்டுக்களை அப்பகுதியில் உள்ள இந்திய வான்படை, NTRO தொழில்நுட்ப நுண்ணறிவு பிரிவு மற்றும் இந்திய, திபெத் எல்லை காவல் (ITBP) உள்ளிட்ட   இந்திய ராணுவ படையினரால் பார்க்கப்பட்டதாகவும், அக்காட்சி அவர்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்தரிக்கை தெரிவித்துள்ளது. இதே பறக்கும் தட்டுக்கள்  சீனாவிலும் பலரால் காணப்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

அக்காட்சியை பார்த்த சிலர் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த பலூன் போன்ற அப்பொருட்கள்  கீழ்வானத்திலிருந்து எழுந்து  வானத்தின் குறுக்காக மூன்று அல்லது ஐந்து  மணி நேரங்கள் பயணம் செய்து  அதன் பின்னர் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தனர். தனக்கு கிடைத்த தகவல்களை ஆராய்ந்து பார்த்த ராணுவ அதிகாரிகள் வானத்தில் தென்பட்ட அப்பொருட்கள் ஆளில்லாத விமானமாகவோ அல்லது தாழ்வாக பறக்கும் செயற்கைகோளாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
Indian Astronomical Observatory ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்களை பல நாட்களாக ஆராய்ச்சி செய்தும் அதன் மர்மங்களை உடைக்கமுடியவில்லை. அடையாளம் காணப்பட முடியாத அப்பொருளின் மர்மங்களை அவிழ்க்க முடியாவிட்டாலும், அவைகள் சிறு கோள்களோ, அல்லது எரிகற்களோ இல்லை என அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
இந்திய சீன எல்லையானது 2,100 மைல் அளவுடையது. இந்த எல்லைகளுக்கு பொறுப்பான இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பறக்கும் தட்டுக்கள் போன்று வானத்தில் காணப்பட்டவை சீன ஆளில்லாத விமானங்கள்  அல்லது தாழ் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள்  என்ற வாதத்தை நிராகரித்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய திபெத் எல்லை காவல் படையினர் (ITBP) தமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் வானத்தில் காணப்பட்ட அந்த  கோளவடிவமான பொருளை அடையாளம் காண முடியாத ஒளிரும் பொருட்கள் (Unidentified Luminous Objects, or ULOs) என குறிப்பிட்டுள்ளனர். அப்பொருட்கள் சில நேரங்களில் பகல்வேளையிலும், சில நேரங்கள் இரவு வேளையிலும் காணப்பட்டதாக அவர்கள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர். ITBP அளித்த புகைப்படங்களை ஆராய்ந்த ராணுவ அதிகாரிகள் அவைகள் ஆளில்லாத உளவு விமானம் என்ற வாதத்தை நிராகரித்ததாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் நடமாடும் ரேடார் அமைப்பையும், ஸ்பெக்ட்ரம் அனலைசர் கருவியையும் இந்திய சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏரிக்கு அருகில் உள்ள மலையின் உச்சியில்  இந்திய ராணுவம் நிறுவியது. ஆனால் வெறும் மனித கண்களுக்கு புலப்பட்ட ஒரு  பறக்கும் பொருள், அங்கிருந்த ரேடாரின் கண்களுக்கு புலப்படவில்லை. அதாவது ரேடார் அந்த பறக்கும் பொருளை சுட்டிக்காட்ட தவறியது. எனவே  அந்த பறக்கும் பொருட்கள் உலோகத்தால் செய்யப்படாமல் இருக்கலாம் என்று இந்தியா டுடே தெரிவித்தது. இதேபோல் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய வான்படையினர் அடையாளம் காண முடியாத பறக்கும் பொருளை கண்டனர். பின்னர் அவைகள் சீனர்களின் ஒளிரும் பலூன்கள் (lanterns) என்று இந்திய ராணுவத்தால் விளக்கம் கொடுக்கப்பட்டன. 
சீனாவின் ஒளிரும் பலூன்கள்
மேற்கண்ட ஒளிரும் பறக்கும் பொருட்களை ஆதாரப்பூர்வமாக விளக்க முடியாத விஞ்ஞானிகள், அதே சமயத்தில் அவைகள் வேற்றுக் கிரகவாசிகள் என்ற வாதத்தையும் ஏற்க மறுக்கின்றனர். வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் இந்தியா டுடே -க்கு அளித்த பேட்டியில் அடையாளம் காண முடியாத ஒளிரும் பறக்கும் பொருட்கள் (UFOs) வேற்றுக்கிரகவாசிகள்  என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றார்.
உண்மை எதுவாயினும் இந்தியா  இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதே நமது முடிவு. ஏனென்றால் சீனாவுடன் நமது உறவு தொடர்ந்து சீர்கெட்டு வரும் நிலையில், சீனாவோ தனது ராணுவத்தை பல புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் பலப்படுத்தி வருகிறது. இந்திய எல்லைப்பகுதிகளில் தனது நிலைகளை நவீனப்படுத்திவருகிறது. இந்த ஒளிரும் பறக்கும் பொருட்கள் சீனாவின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் இந்த ஒளிரும் பறக்கும் பொருளை சுடவேண்டாம் என இந்திய ராணுவத்தினருக்கு மேல்மட்டத்திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக சில  தகவல்கள்  வெளிவந்தது. அவ்வாறு அப்பொருளை இந்திய ராணுவம் தாக்கினால் அது சீனாவுக்கு கோபத்தை உண்டாக்கலாம் என்ற காரணத்திற்காக அக்கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே பயம்தான் 1962 – சீன போரின்போது நமக்கு பெரும் தோல்வியை தந்தது. வரலாற்றில் தோல்விகளை மறக்கலாம். ஆனால் தோல்விகள்  தந்த பாடங்களை இந்தியா ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு இந்தியக்குடிமகனின் ஆசை.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. பறக்கும் தட்டு என்பது பெரிய பித்தலாட்டம்.

    பதிலளிநீக்கு
  2. ஐந்து மணி நேரம் பறந்தும் கண்காணிக்க முடியவில்லை என்பதை தான் நம்ப முடியவில்லை .

    பதிலளிநீக்கு