வியாழன், 22 நவம்பர், 2012

கசாப்புக்கு தூக்கு! -இந்தியாவை பழிவாங்க தலிபான் சபதம்!



அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதற்காக இந்தியாவை பழிவாங்கப்போவதாக தலிபான் அறிவித்துள்ளது. இந்தியர்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் தாக்கபோவதாக தலிபான் எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தூக்கிலிடப்பட்ட கசாபின் உடலை பாகிஸ்தானில் உள்ள அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியாவை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானின் தெஹ்ரி இ தலிபான் அமைப்பின் செய்திதொடர்பாளர் இசானுல்லா இசான் வடமேற்கு பாகிஸ்தானில் நிருபர்களுக்கு தொலைபேசி மூலம் கொடுத்த பேட்டியில் மேற்கண்ட செய்தியினை தெரிவித்தார்.  கசாபின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக, உலகின் எந்த இடத்திலும் நாங்கள் இந்தியர்களையும், இந்திய நலன்களையும் தாக்குவோம் என்று அப்போது அவர் தெரிவித்தார். மேலும் கசாபின் உடலை கசாபின் பெற்றோர்களிடம் இந்தியா ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கசாபின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், நாங்கள் இனிமேல் கொல்லும் இந்தியர்களது  உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இந்தியாவை எச்சரித்தார். 
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாக்கிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத லஷ்கர் இ தொய்பா கமாண்டர் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில் தங்களுடைய அமைப்பினால் கசாப் ஹீரோவாக சித்தரிக்கப்படுவான் என்றும், பிற்காலத்தில் இதுபோன்ற பல தீவிரவாத தாக்குதலுக்கு அவன் முன்னுதாரணமாக திகழ்வான் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானவுடன்  பாகிஸ்தான் தலிபான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தது. தலிபானின்  செய்தி தொடர்பாளர்  இசான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அறிக்கையில் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்தார். இந்தியா எந்த குற்றவாளியையும் எளிதில் தண்டிப்பதில்லை. இந்தியா தீவிரவாதத்தை கையாள்வதில் மிகவும் மென்மையான நாடு என்ற எண்ணம உலகம் முழுவதும் வலுவாக வேரூன்றியுள்ளது. இந்த எண்ணமே கசாப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என்ற தைரியத்தை தலிபானுக்கு தந்திருக்கலாம். ஆனால் கசாப்பின் மரண தண்டனை மிக விரைவில் நிறைவேற்றப்பட்டது தலிபானுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்திருக்கலாம். அதுவே தலிபானின் கோபத்திற்கும், பழிவாங்கல் அறிக்கைக்கும் காரணமாக இருக்கலாம். இந்தியாவில் மிக விரைவாக விசாரணை முடித்து தூக்கிலிடப்பட்டதில் கசாப் இரண்டாம் இடத்தை வகிக்கிறான்.

கசாப்பை பற்றிய சில துணுக்கு செய்திகள்:

மும்பை போலீசார் அஜ்மல் கசாப்புக்கு வைத்த ரகசிய அடையாள பெயர் 'C-7096'. கசாப் தூக்கிலிடப்படும்வரை இந்த பெயரைத்தான்  பொலிசார் தங்கள் ரகசிய தகவல்  பரிமாற்றங்களில்  பயன்படுத்தினர். 

2008, நவம்பர், 26 ,  புதன்கிழமை அன்று கைது செய்யப்பட கசாப் அதே புதன்கிழமை தினத்தன்று புனே ஏர்வாடா ஜெயிலில் நவம்பர் 21, காலை 7:30 க்கு தூக்கிலிடப்பட்டான். கசாப்பின் வயது 25.  

இதற்கு முன்னதாக கடைசியாக மகாராஷ்ட்ராவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1995.

தூக்கிலிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்ட  தகவல் கசாப்பிற்கு நவம்பர் 12  அன்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கசாப் தூக்கிலிடப்படுவது முடிவாகிவிட்டது. அதனை ரகசியமாக செயல்படுத்தும் திட்டத்திற்கு “Operation X” என்று பெயரிடப்பட்டது.

கசாப் தூக்கிலிடப்படுவது பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கூட முன்கூட்டியே சொல்லப்படவில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.

கசாபை தூக்கிலிட்ட பணியாளுக்கு புதிய சம்பள தொகையான ரூ.5000/- சம்பளமாக வழங்கப்பட்டது. 1960 லிருந்து  இன்று வரை ரூ.10/- மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுவந்தது. கசாபை தூக்கிலிட சம்பளமே வேண்டாம் என பலர் விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கசாப் கடைசியாக தெரிவித்த செய்தி தான் தூக்கிலிடப்படுவதை தன் அன்னையிடம் தெரிவித்து விடுங்கள் என்பதுதான். அவனது கடைசி வார்த்தை 'Tell my Ammi'. அவனுடைய இறுதி ஆசை இஸ்லாமாபாத்தில்  உள்ள இந்திய ஹைகமிஷன் மூலம் நிறைவேற்றப்பட்டது. கசாப் தூக்கிலிடப்படும் செய்தி அவனுடைய தாயாருக்கு கூரியர் மூலம் இந்திய ஹைகமிஷனால் நேற்று தெரிவிக்கப்பட்டது. கசாப் அம்மாவின் பெயர் நூரி லாய். 

கசாப் தூக்கிலிடப்படும் செய்தி முன்னதாகவே பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாக சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து:

  1. // இந்தியா தீவிரவாதத்தை கையாள்வதில் மிகவும் மென்மையான நாடு என்ற எண்ணம உலகம் முழுவதும் வலுவாக வேரூன்றியுள்ளது.//

    பதிலளிநீக்கு