சனி, 23 ஜூன், 2012

சிறுவானி அணை பிரச்சினை : கேரள அரசியல்வாதிகளின் இனவாத அரசியல்!

 
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தமிழ் நாட்டில் போராட்டங்கள் ஆரம்பித்து விட்டது. அட்டப்பாடி நீர்ப்பாசனத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே 4.5 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையினைக் கட்ட திட்டமிடுகிறது. காவிரி நடுவர் மன்றம் முன்பும் 4.5 டி.எம்.சி அளவு நீரை அட்டப்பாடி திட்டத்திற்காக கேரளா கோரியிருந்தது.ஆனால் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் அட்டப்பாடிக்காக 2..87 டி.எம்.சி அளவுதான் நீர் ஒதுக்கமுடியும் எனக்கூறிவிட்டது. நடுவர் மன்றத் தீர்ப்பினை எதிர்த்து கேரளாவும், கர்நாடகமும் உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்திருக்கின்றன. அவ்வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது, கேரளா நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மீறி சிறுவாணியில் அணை கட்டுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனவும், எனவே, மத்திய அரசு கேரளம் அவ்வாறு அணை கட்டக்கூடாது என அறிவுறுத்தவேண்டும் எனவும், மத்திய நீர் ஆணையம் அவ்வாறு அணை கட்ட அனுமதியளிக்கக்கூடாது எனவும் தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் சளைத்தவர்கள் அல்ல.  தங்களுக்கு ஆதாயம் என்றால் டெல்லியில் சென்று காத்து கிடப்பதும், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கடிதத்துடன் முடித்துகொள்வதும் இந்த அரசியல்வாதிகளுக்கு சகஜம்தான். ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் வாயை திறக்கப்போவதில்லை என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.  பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் நமக்கு தெரியும். கேரள அரசு 2006 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற தீர்ப்பை  நடைமுறைபடுத்த மறுத்து kerala irrigation and conservation (amendment) Act 2006 சட்டத்தை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இயற்றி கேரளாவில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு பற்றி முடிவு எடுக்கும் உரிமை கேரளாவுகே உண்டு என கூறியது. அதாவது அணையின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றமோ, அல்லது எந்த ஆணையமோ கேரளாவிற்கு ஆணையிட முடியாது என்றது. கேரளா அரசு கொண்டு வந்த இந்த சட்டம் செல்லுமா? என்பது தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் முன் பரிசீலனையில் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் இவ்வாறு சட்டம் இயற்றி கொண்டால் தேசிய ஒருமைப்பாடு என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?.  
அணையின் பலம் பற்றி ஆராய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் அடங்கிய நிபுணர் குழு அணை பலமாக உள்ளது என அறிக்கை அளித்துள்ளது. அணையின் பலத்தை பற்றி பொறியாளர்கள்தான் முடிவு செய்ய முடியும். எம்பிக்களும், MLA க்களும் எவ்வாறு முடிவு செய்ய முடியும்? இந்த  அறிக்கையை கேரள அரசு உரிய காரணங்கள் இல்லாமல் ஏற்க மறுப்பது கேரள மக்களிடையே இன வெறியை அணையவிடாமல் தூண்டிவிடுவதற்காகத்தான்.
கர்நாடக அரசும், கேரளா அரசும் ஏன் தமிழ் நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடிக்கின்றன?. நிச்சயமாக வோட்டு அரசியல்தான் காரணம். உள்ளூர் பிரச்சினைகளால் இழந்து வரும் தம் செல்வாக்கினை தூக்கி நிறுத்த,  மக்களை திசை திருப்புவதற்காகவே மக்களின் இன உணர்வுகளை தூண்டி விட்டு இது போன்று பிரச்சினைகளை உருவாக்குகின்றன அரசியல் கட்சிகள். மக்கள் அரசியல் கட்சிகளின் இந்த சதி திட்டத்திற்கு பலியாகிவிடக்கூடாது.   
மாநிலங்களுகிடையிலான பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று பிரச்சினையை ஆறப்போட்டால் அது தானாகவே தீர்ந்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம்.  இரண்டு பாழாய் போன வோட்டு அரசியல். காரணம் எதுவாக இருந்தாலும் நியாயமான முறையில் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் அது மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வித்தாகிவிடும். பரம எதிரியாக இருக்கும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கூட சிந்து நதி தொடர்பாக தண்ணீர் பிரச்சினை வராதபோது இந்திய மாநிலங்களுக்கிடையே பிரச்சினை ஏன் வருகிறது?. இந்தியாவில் தேசிய கட்சிகள் வலுவிழந்து மாநில கட்சிகள் பலம் பொருந்தியவைகளாக இருப்பதற்கு மக்களின் குறுகிய மனம் காரணமா? அல்லது தம்  உரிமைகளை மாநில கட்சிகளே பெற்று தரும் என மக்கள் நம்புகிறார்களா?. இந்தியாவின் தேசிய கட்சிகள் கூட  பிராந்திய கட்சிகள் போன்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு முடிவினை எடுத்து  குறுகிய மனதுடன் அரசியல் செய்வது ஏன்?.
ஆனால் மாநில அரசுகள்  எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையிலயே இருக்கின்றன.  பல மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூட மதிப்பதில்லை. அதாவது அரசியல் சட்டத்தை கூட மதிப்பதில்லை. அரசியல் சட்டத்தை மதிக்காத மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய இப்போதைய  மத்திய அரசுக்கு தைரியம்  உண்டா?
மாநில மக்களிடையே இன வெறியை தூண்டும் இத்தகைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை தொடக்கத்திலயே இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு அடக்க வேண்டும். இல்லையெனில் மத்திய அரசின்  கையாலாகாத்தனம்  மக்களை தூண்டி விட்டு குளிர் காயும் அரசியல்வாதிகளுக்கு மென்மேலும் வலுவைத்தரும். இத்தகைய அரசியல்வாதிகள் பெறும் அரசியல் அதிகாரம்  இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிப்பதாக அமையும்.   



More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக