புதன், 20 ஜூன், 2012

கலாம் என்றால் கலகம்! கருணா என்றால் துரோகமா?!

கலாம் என்றால் கலகம் என்று அர்த்தம் சொன்ன கலைஞர் அவர்களின் அறிவாற்றலையும், எதுகை மோனை திறமையையும்  நினைத்து புளகாங்கிதம் அடைந்த எனக்கு கருணாநிதி என்ற பெயருக்கு அர்த்தம் கண்டுபிடிக்க ஆவலானது. என் மூளையை கசக்கி பிழிந்து யோசித்துகொண்டிருந்தேன்.

இதற்கிடையில் கலைஞர் டெசோ (Tamil eelam supporters organization) என்ற இயக்கத்தை மறுபடியும் ஆரம்பித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அதாவது டெசோ இயக்கம் தமிழ் ஈழம் பெற்று தரும் என அறிவித்திருந்தார்.  இந்த அறிக்கையை வெளியிடும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்கும். அது வேறு விஷயம். ஆனால் எனக்கு ஒரு ஆவல் உண்டாயிற்று. இந்த டெசோ இயக்கம் இதற்கு முன்னால் என்ன பணியினை செய்தது?. அதன் தோற்றம் எப்படி? அதன் நோக்கம் என்ன?. இப்படி பல வினாக்கள் எனக்குள் உண்டாயிற்று. இணையத்தில் தேடினேன். கிடைத்த விவரங்கள் இதுதான்.
.தமிழ் ஈழ மக்களுக்கு உற்ற துணையாக இருப்போம், அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து தமிழ் ஈழம் மலர வழி காணுவோம் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் டெசோ எனும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (TESO). 1985-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் இந்த அமைப்பு உருவானது.
இந்த அமைப்பின் 5 முக்கிய நோக்கங்கள்:
இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு
இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது
போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது
தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருப்பது
இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது ஆகியனவாகும்.
இந்த 5 உறுதிமொழிகளை, டெசோஅமைப்பு சார்பில் நடத்தப்படும் பேரணி பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.கருணாநிதி படித்து, அதனை மக்கள் ஏற்பதை  நடைமுறைப்படுத்தியிருந்தனர்.
1985- ல் டெசோ ஆரம்பிக்கப்பட்டபோது  கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக கூட கிடையாது டெசோ அமைப்பின் முக்கிய ஐந்து நோக்கங்களில் ஒன்றையாவது கருணாநிதி மனப்பூர்வமாக பின்பற்றினார் என்று யாராலும் கூற முடியாது.. ஆட்சியில் இருக்கும்போது டெசோ கொள்கைகளை மறந்து விடுவதும், ஆட்சியில் இல்லாதபோது டெசோ இயக்க கொள்கைகள் ஞாபகத்துக்கு வருவதும் சிறந்த ராஜதந்திரம் என்பது  அவர் நம்பிக்கை. ஆனால் மக்கள் அவரை இப்போது ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை அவர் அறிவாரா?
ஈழப்போரின் இறுதிகட்டத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டபோது கண்டும் காணாமல் வாய் மூடி காங்கரஸ் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்துவிட்டு இப்போது  டெசோ ஈழம் வாங்கி தரும் என்கிறார். ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஈழம் பற்றி கருணாநிதி பேசுவதின் நோக்கம் என்ன?.  டெசோ மீண்டும் தொடங்கப்பட்டது ஈழம் வாங்கித்தர அல்ல. அதிமுக பக்கம் காங்கிரஸ் தாவி விடுமோ என்ற சந்தேகமும், எனவே காங்கிரசை மிரட்டி வைக்கவும்தான்  டெசோ இயக்கம் கருணாநிதியால் தொடங்கப்பட்டது என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
இங்கே நண்பர்கள் பேசும்போது, இலங்கையிலே நடத்தப்பட்ட சிங்களவர்கள் நடத்திய கொடுமைகள் பற்றியும், அந்த கொடுமைகளை தாங்கி கொண்டு உயிர்விட்ட, சிங்கள வெறியர்களால் துரத்தப்பட்டு இன்னமும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுக்கு உரிமை கிடைக்க இந்திய அரசை வலியுறுத்துவோம். இந்திய அரசை நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம் என்பது மாத்திரம் அல்ல. உலகத்தினுடைய கவனத்தை திருப்ப எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்பதற்கு அடையாளமாகத்தான் விழுப்புரத்திலே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அடைந்துள்ள டெசோ அமைப்பின் சார்பில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க, அவர்களுடைய நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க டேசோ மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

இப்போது எனக்கு ஒரு சந்தேகம்.

அப்படியானால் பல்லாயிரக்கணக்கான  அப்பாவி மக்கள் இறுதிபோரில் கொல்லப்பட்டபோது இவர் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லையா? அல்லது இவர் கொடுத்த நெருக்கடிக்கு மதிப்பு இல்லையா?.இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதும், இன்னும் மக்கள் கொல்லப்படுகிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று வசனம் பேசியதும் தமிழர் நெஞ்சில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை கருணாநிதி அறிவாரா?

ஒருவேளை கருணா என்றால் துரோகம்  என்று அர்த்தமோ?   
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து:

  1. தமிழர்களை ரத்தம் சிந்த வைத்து தான் மட்டும் தப்பிக்க நினைத்த பிரபாகரன் என்றால் துரோகி என்று அர்த்தம்.

    பதிலளிநீக்கு