வெள்ளி, 6 ஏப்ரல், 2012

13+ அரசியல் தீர்வு: ராஜபக்சவின் அந்தர்பல்டி! இந்தியா அதிர்ச்சி!

1987 ல் கையெழுத்திடப்பட்ட   இந்தியா இலங்கை இடையேயான  ஒப்பந்தத்தின் படி இலங்கையின் 13  வது அரசியல் சட்ட திருத்தம் உருவாக்கப்பட்டது. ராஜீவ்காந்தி மற்றும்  ஜெயவர்த்தனே ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி 13+ அரசியல் தீர்வு திட்டத்தினை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்பது இந்தியாவின் கொள்கை. 13+ அரசியல் தீர்வு திட்டம்   இலங்கையின்  மாகாணங்களுக்கு அதிக உரிமைகளை தருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள கூட்டாட்சி (Federal set up) முறை போன்றது. இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் போன்று இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு அதிகாரத்தை தருகிறது மேலும் 13+  அரசியல் தீர்வு திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை பிந்தைய கருத்துக்கணிப்பு (referendum)  மூலம் இணைப்பது  குறித்த வழிகாட்டுதல்களையும் முறைகளையும் உள்ளடக்கியது.

போருக்குப்  பின்னால்  இலங்கையில்  13+  அரசியல் தீர்வு திட்டம்  அமல்படுத்தப்படும் என போர் நடக்கும்போது அறிவித்த ராஜபக்ச, தற்போது தலைகீழாக பல்டி அடித்து  இந்தியாவின் முகத்தில் கரியை பூசி உள்ளார். வழக்கம் போல் ஏமாந்து நிற்கிறது இந்தியா. ௦01-04-2012 அன்று நிருபர்களுக்கு பேட்டி  அளித்த  ராஜபக்ச  தான்  13+ அரசியல் தீர்வு திட்டத்தை  அமல்படுத்தப்போவதாக இந்தியாவிடம் எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை என்றார். மேலும் PSC (Parliamentary select committee) கமிட்டியே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறியுள்ளார். அப்போது நிருபர்கள் அவரிடம், அப்படியானால் இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணா உடனான சந்திப்பின் போது தாங்கள் 13+ வது அரசியல் சட்டத்திருத்தத்தை கொண்டு வரபோவதாக இந்தியாவிடம் உறுதிமொழி அளித்ததாக இந்தியா கூறியது பொய்யா? என்று கேட்ட போது அதற்கு ராஜபக்ச தான் முதலில் இருந்து 13+ திட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும், தற்போதும் ஆதரவாக உள்ளதாகவும், ஆனால் தமிழ் கட்சிகள் தங்கள் விருப்பங்களை PSC குழுவிடம் முன்வந்து தெரிவிக்கவேண்டும் எனவும், அதன் பின் PSC குழு இதுதான் நீ  செய்ய வேண்டியது  என்று சொன்னால் அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற தான் எந்த தடையும் சொல்ல போவதில்லை என்றும், ஆனால் இந்த பிரச்சினை  தன்னுடைய சொந்த பிரச்சினை இல்லை  என்றும், பாராளுமன்றமே PSC குழுவின்  பரிந்துரைகளை நிறைவேற்றுவது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.  ஆனால் இதற்கு முன்னர் ராஜபக்சவும், இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணாவும் கூறிய கூற்றுக்களை சற்று நினைவுபடுத்தி பார்ப்போமானால் ராஜபக்சேயின் அந்தர்பல்டி நமக்கு புரியும்.

ஜனவரி பதினேழாம் தேதி அன்று ராஜபக்ச உடனான சந்திப்புக்கு பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் S.M.கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கான தீர்வு  குறித்து தான் ராஜபக்ச உடன் விவாதித்ததாகவும், அப்போது ராஜபக்ச 13+ அரசியல் தீர்வு திட்டத்தினை  இலங்கையில் அமல்படுத்துவதில் உறுதியாக  இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
2011 மே மாத இறுதியில் புதுடெல்லியில் வெளியிடப்பட்ட இந்திய இலங்கை வெளிநாட்டு மந்திரிகளின் கூட்டறிக்கையில் “A devolution package, building upon the 13th Amendment, would contribute towards creating the necessary conditions for such reconciliation.” என்று தெரிவித்தனர்.
போர் நடைபெறும்போது, இந்தியாவின் உதவி தேவைப்பட்டதால்  13+ திட்டம் இலங்கையில் நிறைவேற்றப்படும் என இந்தியாவுக்கு பொய் உறுதிமொழி அளித்து வந்த ராஜபக்ச, இப்போது PSC கமிட்டிதான் இது குறித்து முடிவு செய்யும் என்று கூறி இந்தியாவை கழற்றிவிடப் பார்கிறார்.. அதுமட்டுமில்லால் இலங்கையின் பிரச்சினைக்கு சமாதான தீர்வு காண எந்த வெளிநாட்டு உதவியும் தேவை இல்லை என்கிறார். எது எப்படி இருந்தாலும்  இந்தியாவின் ராஜதந்திரம் இலங்கையிடம் மற்றொரு முறை தோற்று போனது மட்டுமே உண்மை.  
இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் லக்ஷ்மன் கிரியேல்ல தெரிவிக்கையில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் 13+ தொடர்பாக விளக்கம் கேட்டபோது இலங்கை அரசு மௌனம சாதித்ததனாலேயே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்று தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு கடுகளவு உரிமைகளை கூட தருவதற்கு இலங்கை அரசுக்கு எண்ணம இல்லை என்பதையே நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் தமிழர்கள் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இதுவரை முன் வைக்கப்படவில்லை. இலங்கையில் சமத்துவ, சம உரிமைகளை கொண்ட, ஏற்றத்தாழ்வு இல்லாத அதிகார பகிர்வினை ராஜபக்ச கொண்டு வருவார் என இனிமேலும்  யாராவது நம்பினால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது.  


More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. விஜயகுமார் ஐயா அவர்கட்கு,

    தங்களுடைய கருத்துக்கனிப்புக்களை வாசித்தறிந்தேன். அதற்கு எமது கருத்துக்களையும் இங்கு விளக்குவதற்கு ஆவல்.

    1970ம் ஆண்டுகளில் இருந்து 1987 வரை இந்தியா இலங்கை தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிர்ச்சி அளித்தார்கள். அரசியல் காரணங்களினால் சீனாவும் அடங்குவதால், இங்கு விவாதிக்க வரவில்லை. இது இன்னொரு நாட்டின் இறையாண்மையை அளிப்பதற்குரிய செயலாகும். 1986ம் ஆண்டின் அணிசேரா மகாநாட்டின்பின், ரஜிவ் காந்தி இந்திய படைகளை இலங்கைக்கு அனுப்பினார். இந்தியப் படை யாழில், கொலைகள், கற்பளிப்புகள் இப்படி எத்தனையோ அட்டூளியங்களைச் செய்தார்கள். இல்லையென்று கூற முடியாது. ஏனெனில், எமது மனைவியின் தாய் வீட்டை இந்திய இராணுவம் எடுத்து அந்த வீட்டில் குடி இருந்தார்கள். இந்த வீட்டை நாசமாக்கி விட்டுத்தான் சென்றார்கள். சிறு௺ர் களித்து புட்டிகளில் வைத்தார்களாம். மிருகங்கள்.

    இலங்கைக்கு எந்த ஒரு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவருவது என்றாலும், அது மக்களுடைய அங்க்கீகாரத்தோடுதான் கொண்டுவரமுடியும். இலங்கைக்கு இப்படியொரு அரசியல் திருத்தம்தான் கொண்டுவாருங்கள் என்று இந்தியா ஆணையிடமுடியாது. அவர்களுக்கு அதிகாரமும் இல்லை.

    சரி, இனி மாகாண / மாநில அரசின் பொருளாதார சாத்தியக்கூறுகளைப் பார்ப்போமா? கடந்த 22 வருடங்க்களாக இலங்கை அரசின் மதியீன மாகாண அரசியல் நிர்வாகத்தின் செயல் விளைவுறுத்தன்மையை பார்ப்போமானால், இலங்க்கை அரசு கோடி கோடியாக நட்டத்தையே பெற்றது. ஆதாரம்: மத்திய வங்கி.

    தயவு செய்து கீழ் கண்ட இணயதளத்தில்:

    Ref: http://www.asiantribune.com/news/2011/04/14/provincial-councils-sri-lanka-political-economy-perspective

    ஒன்றரைக்கோடி மக்கள் வாழும் இலங்கை மாகாண அரச நிர்வாகத்திற்கு 2009 ஆண்டு செலவு: 11,133.6 கோடி ருபாய். 2002 ஆண்டு செலவு 2,885.6 கோடி ருபாய். இந்தச் செலவு வட கிழக்கைத்தவிர மற்றய மாகாணசபைக்கு. அதாவது 7 மாகாண செலவு. ஆனால் வரவு எவ்வளவு? வேர் கடலை கூட இல்லை. இதோடு வட கிழக்கையும் இணைத்தால், என்ன செலவு? நிர்வகிப்பதற்குரிய வருமானம் எப்படி?. இலங்கை ஒரு சிறிய நாடு. ஒன்றரைக்கோடி மக்கள் வாழும் நாட்டிற்கு இத்தனை மாகாண சபைகள் தேவையா?

    ஒரு அரசாங்கத்தில், தமிழர்களும் மந்திரிகளாக அங்கத்துவம் வகிக்கலாம்தானே? இப்பதவிகளை அரசியல் சட்டம்மூலம் செயல்படுத்தலாமே.

    தங்களுக்கு ஒரு கேள்வி: தமிழகத்தை கூறு போடலாமா? அதாவது (1) சேர மாநிலம் (கோயம்புத்தூர் தலைநகரம்), (2) பாண்டிய மாநிலம் (மதுரை தலைநகரம்), (3) சோழ மாநிலம் (தஞ்சாவூர் தலைநகரம்), (4) பல்லவ மாநிலம் (சென்னை தலைநகரம்). பாண்டிச்சேரி ஏற்கனவே ஒரு மாநிலம். ஏனேனில் 7 கோடி மக்கள் வாழும் தமிழகத்தை ஒரு மாநிலமாக நிர்வாகிப்பது கஷ்டம்.

    ஆனபடியால் 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கைக்கு தேவையற்றது.

    நன்றி, வணக்கம்

    சாண்டில்யன்

    பதிலளிநீக்கு
  2. அய்யா,
    நிர்வாக வசதிக்காக புது மாநிலங்களை உருவாக்குவது தவறில்லை. இந்தியாவில் கூட சமீபத்தில் உத்தரகாண்ட், ஜார்கண்ட், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் புதிதாக உருவாக்கப்பட்டன. தமிழ் நாட்டை கூட இரண்டு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க முன்வைத்தது. இலங்கையை பொறுத்தவரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசு அதிகாரத்தில் அதிக பங்கினை பெற வட, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகாரப் பரவல் செய்வது தவறில்லை என்பது என் கருத்து. மற்றபடி நிர்வாக சீர்கேடு என்பது தற்காலிக பிரச்சினை. அனைத்து நாடுகளிலும் உள்ள பிரச்சினை அது. சரியான தலைமையை தேர்ந்தெடுப்பது என்பதே ஜனநாயக முதிர்ச்சி ஆகும்.

    தங்கள் கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு