திங்கள், 21 ஜூலை, 2014

நாட்டின் பாதுகாப்பு துறையில் பிரிவினையை உண்டாக்கும் RTI Act விஷமிகள்!

RTI Act 2005 எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 ஐ காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய சாதனையாக ராகுல் காந்தி எப்போதும் குறிப்பிடுவதுண்டு. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்னமோ அரசின் நிர்வாகம் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.  ஆனால் இந்த சட்டம் வேலை வெட்டி இல்லாத பல இந்தியக் குடிமகன்களுக்கு  ஒரு பொழுது போக்காகத்தான் பயன்படுகிறது. பத்து ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டிவிட்டு ஒரு ஏ4 பேப்பரில் ஆயிரம் கேள்விகள் கேட்பது. அதிலும் அர்த்தம் இல்லாத கேள்விகள். பத்து பைசாவுக்கு பெறாத கேள்விகள். அந்த கேள்விகளூக்கு இருபத்தைந்து நாளில் பதிலளிக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் தொகை ஒன்றை அபராதமாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்  செலுத்த வேண்டும். கொடுத்த பதில்கள் திருப்தி இல்லை என்றால் அப்பீல் செய்துகொள்ளும் வசதி வேறு. இதனால் அரசு அலுவலகங்களின் மிகப்பெரும் நேர இழப்புதான் ஏற்படுகிறது.  RTI Act தேவையில்லாத ஒன்று என்பது என் கருத்தல்ல. ஆனால் இந்தச்சட்டம் பயன்படுத்துவதற்கு சில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும் என்பது என் உறுதியான கருத்து.    

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். SPG (Special Protection Group) என்ற அமைப்புதான் இந்திய பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கான முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளது. இதுவே இந்தியாவின் மிகவும் திறமை வாய்ந்த கமண்டோக்களை உள்ளடக்கிய முதல் தரம் வாய்ந்த செக்யூரிட்டி அமைப்பாகும்.  இந்த அமைப்பு குறித்து கூர்கான் பகுதியை சேர்ந்த அசீம் என்பவர் RTI Act ன் கீழ் கேட்டுள்ள தகவல்கள் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.  அவர் கேட்டுள்ள தகவல்கள்   இதுதான்.
1)  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின் SPG அமைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது  மதத்தை  சேர்ந்த வீரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா?
2) குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது மதத்தை சார்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுதல் என்பது மனித உரிமை மீறலாக கருதப்பட வேண்டும்.
3)     தற்போது SPG யில் பணிபுரியும் வீரர்களின் பட்டியல் இனம் மற்றும் மதம் வாரியாக வெளியிடப்படவேண்டும்.
அசீம் கேட்ட தகவல்கள் பொது தகவல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அவர் மேலும் இரண்டு முறை மேல் முறையீடு  செய்தார். அவருடைய இரண்டு மேல் முறையீட்டு மனுக்களும் மேல் முறையீட்டு அதிகாரி மற்றும் மத்திய தகவல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. முதல் காரணம் SPG அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் ச/பி 24(1) ன் படி  RTI Act லிருந்து விதிவிலக்கு பெற்ற அமைப்பாகும். மேலும் ச/பி 24(1) ன் படி, மனுதாரர் கேட்ட தகவல்கள் மனித உரிமை மீறல் சம்மந்தப்பட்டதாகவோ அல்லது லஞ்ச ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளாகவோ இருந்தால் அத்தகவல்களை மத்திய தகவல் ஆணையத்தின் ஒப்புதலோடு 45 நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்க சட்டம் வகை செய்கிறது. ஆனால் மனுதாரர் கேட்ட தகவல்கள் வேறானவை என்பதால் மனுதாரர் கேட்ட தகவல்களை தர இயலாது என்று மத்திய தகவல் ஆணையம் தெரிவித்து விட்டது.    


ஆனால் இந்தச் சம்பவமமானது தகவல் உரிமைச் சட்டம் என்பது எந்த அளவிற்கு மக்களுக்கு பயன்படுகிறதோ, அதே அளவிற்கு நாட்டில் பிரிவினையை உண்டாக்க நினைக்கும் விஷமிகளுக்கும் பயன்படுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. எங்கெல்லாம் இனம் மற்றும் மதம் பற்றிய சிந்தனை ஒழிய வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அங்கெல்லாம் இன, மத வேறுபாடுகளை நிலைத்திருக்கச் செய்யவே அரசு விரும்புகிறது. அது நாம் முதன்முதலாக காலடி எடுத்து வைக்கும் பள்ளிக்கூடத்திலிருந்து, சுடுகாடு வரை தொடர்கிறது. ஆனால் நாட்டின் முக்கிய பாதுகாப்புத் துறைகளில் இன மற்றும் மத பிரிவினையை தூண்டுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சியின் போது ராணுவத்தில் மத, இன ரீதியான கணக்கெடுப்புக்கு மிகுந்த முயற்சி செய்தது. ஆனால் அத்தகைய கணக்கெடுப்பினால் என்ன இலாபம் விளையப்போகிறது என்பதை அரசு விளக்கவில்லை. அவ்வாறு அரசு விளக்கினால் அதற்கான விளக்கங்களையும் நம்மால் தர இயலும்.  ஆனால் காங்கிரஸ் அரசின் நோக்கம் ராணுவத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வாக்குகளை அறுவடை செய்வதுதான் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. அதேபோல் அசீமின் RTI கேள்விகளுக்கு பின்னால் இருப்பதும் அரசு அமைப்பில் முடிந்தவரை பிரிவினையை ஏற்படுத்துவதுதான். காங்கிரசுக்கு கிடைக்கப்போகும் லாபம் வாக்காக இருந்தால், அசீமுக்கு கிடைக்கப்போகும் லாபம் என்னவோ? 
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக