செவ்வாய், 13 நவம்பர், 2012

கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் McAfee antivirus நிறுவனர்!-மர்மங்கள் விலகுமா!?



ஜான் மெக்கபி(John McAfee), McAfee ஆண்டி வைரஸ் நிறுவனத்தை 1990-களில் தோற்றுவித்தவர். 67 வயது நிரம்பிய அவர் பெலிஸ் (Belize) தீவின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அம்பேர்கிரிஸ் கேய்  என்ற குட்டித்தீவில் ஆடம்பர பங்களாவில்  கடந்த நான்கு வருடங்களாக வசித்துவருகிறார். பெலிஸ் தீவு முன்பு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்த ஒரு நாடாகும். அமெரிக்கரான கிரிகோரி பவுல் (Gregory Faull) என்பவரை ஜான் மெக்கபி கொலை செய்துள்ளதாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும்  பெலிஸ் காவல் அதிகாரி மார்கோ விடால் தெரிவித்துள்ளார்.

பவுலின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய கடந்த ஞாயிறன்று ஜான் மெக்கபி வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ஆனால் ஜான் மெக்கபி தலை மறைவாகிவிட்டதாகவும் காவல் அதிகாரி மேலும் தெரிவித்தார். கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் நபராக ஜான் மெக்கபி அறிவிக்கப்பட்டுள்ளார் என்று விடால் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பல மாதங்களுக்கு முன்னதாக விடால் தலைமையிலான குழு ஒன்று ஆயுதம்,  போதைமருந்து பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக ஜான் மெக்கபியின் வீட்டில் சோதனை நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போதும் ஜான் மெக்கபி பல மணி நேரம் போலீஸ் கஸ்டடியில்  சிறை வைக்கப்பட்டார்.உள்ளூர் அரசியல்வாதி ஒருவருக்கு தேர்தல் பிரச்சார செலவுகளுக்கு நன்கொடை வழங்க மறுத்ததால் தாம் கைது செய்யப்பட்டதாக அப்போது ஜான் மெக்கபி  தெரிவித்திருந்தார்.

புளோரிடாவை சேர்ந்த 52 வயதான பவுல் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டதாக அவருடைய வீட்டு வேலைக்காரர் கடந்த ஞாயிறன்று காலை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். கொலை நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து 9mm ஷெல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது பவுலின் கழுத்தின் பின்பகுதியில் உள்ள காயத்துடன் சரியாக பொருந்துவதாகவும் பெலிஸ் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரபேல் மார்டினஸ் தெரிவித்தார். 

குற்றவாளி பவுலின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனவும், பவுலின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை காணவில்லை என்றும் போலீசின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 

தீவில் வசிக்கும் மக்கள்  Gizmodo இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், சில நாட்களுக்கு முன்பு பவுல், ஜான் மெக்கபி இடையே தகராறு நடந்ததாக கூறியுள்ளனர். உள்ளூர் மக்கள் தங்கள் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் Gizmodo இணையதளத்திற்கு சில தகவல்களை அளித்துள்ளனர். ஜான் மெக்கபியின் நடவடிக்கைகள் மர்மமாகவும், சந்தேகத்திற்கிடமானதாகவும் இருந்துவந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.  அவர் தீவில் தன்னுடைய சக அமெரிக்க சமூகத்திடமிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் அம்மக்கள் மேலும் தெரிவித்தனர். ஜான் மெக்கபி சமீப காலமாக மனநிலையை தூண்டக்கூடிய  மருந்துகள் தயாரிப்பது குறித்து ஆய்வுகள்  செய்துவந்தார்  என்றும் Gizmodo இணையதளம் மேலும் தெரிவித்துள்ளது.

சில காலங்களாகவே John McAfee குறித்து எதிர்மறையான தகவல்களே ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தன. கோபுரத்தில் வாழ்ந்து  சேற்றில் விழுந்த பெரிய மனிதர்களுள் அவரும் ஒருவராகிவிட்டார். இனிவரும் காலங்களில் McAfee ஆண்டி வைரஸ் நிறுவனர் John McAfee- யின் மர்ம ரகசியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என்று நாம் நம்பலாம்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக